விருதுநகரிலிருந்து 32 கி.மீ, சாத்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது, இருக்கண்குடி மாரியம்மன் கோயில். பக்தர்களின் இன்னல் போக்கும் தலம். முன்பொரு காலத்தில், சாணம் பொறுக்குவதற்காக வந்த இளம்பெண், தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் வைத்த கூடையை எடுக்க முடியாது திண்டாடினாள். கூட்டம் கூடியது.அப்பெண், ‘நான் மாரியம்மை… எனது திருமேனி இங்கே மணலில் புதைந்து கிடைக்கிறது. எடுத்து வழிபடுங்கள்’ என்று அருள் வந்து கூறினாள். மணலை தோண்டி சிலையைக் கண்டறிந்த மக்கள் அங்கு கோயில் கட்டி வழிபட்டனர். ஆக்கலும் அழித்தலும் நானே என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார் இருக்கண்குடி மாரியம்மன்.

வைப்பாறு, அர்ச்சுனா நதிகள் சூழ கோயில் உள்ளதை இரு கங்கைகள் கூடுவதாகக் கூறி இருக்கங்(ண்)குடி என்று ஊர் அழைக்கப்படுகிறது.

இங்கு வாழவந்தம்மன், ராக்காச்சியம்மன், பேச்சியம்மன், முப்பிடாரியம்மன் ஆகியனவும், காவல் தெய்வமாக கருப்பசாமியும் உள்ளனர்.

குழந்தைப்பேறு, திருமண வரம், அம்மை நோய், உடல் உறுப்புகள் குறைபாடுகள் தீர நேர்ந்து கொள்ளுதல், பார்வை தர வேண்டுதல் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனைகள்.அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

அம்மனுக்கு அக்னிச் சட்டியும் ஆயிரங்கண்பானையும் எடுத்து அருளோடு வலம் வந்து வேண்ட, வாழ்க்கையில் வளம் பெறலாம். கயிறு குத்துதல், உடல் குறைபாடுள்ளவர்கள் உருவபொம்மை செய்து வைத்தல், குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வைத்தல், விளக்கு போடுதல், புடவை சாத்துதல், அன்னதானம் செய்தல் உள்ளிட்டவை பக்தர்களின் நேர்த்திகடன்களாக உள்ளன.

பஞ்ச பாண்டவர்கள் தீர்த்தமாடிய அர்ச்சுனன் ஆறு கோயிலுக்கு வடக்கில் உள்ளது. இங்குள்ள வயன மண்டபத்தில் 20 நாள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்து தடவினால் கண்பார்வை கிடைக்கும். அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மருத்துவர்களால் கை விடப்பட்ட அம்மை,தீராத வயிற்று வலி,கை கால் ஊனம்உள்ளிட்டவை நீங்கும் அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.ஆடி வெள்ளி அம்மனை வழிபட சிறந்த தினம். அம்மனை நினைந்துருக, எண்ணிய வளங்கள், நினைத்ததெல்லாம் கிட்டுகின்றன. தாயின்றி நாம் இல்லை. அம்மனை வணங்கி உயர்வோமாக!

Advertisements